மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது


மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில், சிவகிரி தெற்கு பிரிவு வனவர் அஜித்குமார், வடக்கு பிரிவு வனவர் அசோக்குமார், வனக்காப்பாளர்கள் கொண்ட தனிக்குழுவினர் கருப்பசாமி கோவில் பீட் எல்கைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, சிவகிரி தாலுகா உள்ளார் கிராமத்தை சேர்ந்த பொன்னுத்துரை (வயது 39), சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் (39), கனிராஜ் (25), விக்னேஷ் (27), அசோக்குமார் (20) உள்ளிட்டவர்கள் கடமான் மற்றும் புள்ளிமான்களை வேட்டையாடி இறைச்சிகளை பங்கு வைத்து கொண்டு இருந்தனர்.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, இறைச்சிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய அரிவாள், கத்தி, ஒலி பெருக்கி கருவி, மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிடிபட்ட 5 பேரையும் வனத்துறையினர் செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தென்காசி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.


Next Story