பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
ஆவுடையார்கோவில் தாலுகா தச்சமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி கலைமதி (வயது 35). இவர் சாட்டியாக்குடி ஊராட்சியில் மக்கள் நல பணியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோட்டையூரில் இருந்து ஏம்பல் வழியாக சாட்டியாக்குடி ஊராட்சிக்கு மொபட்டில் தனது குழந்தையுடன் கலைமதி சென்று கொண்டு இருந்தார். ஏம்பல் விச்சூர் பிரிவு சாலையில் மொபட்டை நிறுத்திவிட்டு தனது குழந்தைக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கலைமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கலைமதி கொடுத்த புகாரின் பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.