ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு
திமிரியில்ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பெண்கள் பாடசாலை தெருவை சேர்ந்தவர் தயாளன் பாபு. ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அகிலா (வயது 46). இவர் திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஜெயசூர்யா என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெயசூர்யா பள்ளிக்கு சென்று மீண்டும் மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து அவரது தாய் அகிலாவிற்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த ்செயின், மூன்று ஜோடி கம்மல் மோதிரம் உள்ளிட்ட5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அகிலா திமிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.