5 கூரை வீடுகள் எரிந்து நாசம்
வேளாங்கண்ணி அருகே 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
5 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் கீழ ஈசனூர் பாண்டியன் குளம் தெருவை சேர்ந்தவா் சுப்பிரமணியன் (வயது45). இவருடைய கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை தொடர்ந்து தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீப்பொறி பறந்து அந்த பகுதியில் உள்ள ராஜா, மகேந்திரன், பன்னீர்செல்வன், மற்றும் அவரது தம்பி சசிகுமார் ஆகிய 5 பேரின் வீடுகள் மீது விழுந்து எரிந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
இதுகுறித்து வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் 5 வீடுகளும் எரிந்து நாசம் அடைந்தன. இந்த தீவிபத்தில் 5 வீடுகளில் இருந்த ஆடைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
நிவாரண பொருட்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண பொருட்களை வழங்கினர்.மேலும் கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், வெற்றிச்செல்வன், தி.மு.க. கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.