இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைதான இலங்கை மீனவர்கள் 5 பேர் போலீசில் ஒப்படைப்பு


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைதான இலங்கை மீனவர்கள் 5 பேர் போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் நேற்று கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் நேற்று கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள்

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் வஜ்ரா, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.

உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகில் இலங்கை நீர்க்கொழும்பு முன்னக்கரையை சேர்ந்த அந்தோணி பெனில் (வயது 59), ரஞ்சித் சிரான் (45), ஆனந்தகுமார் (53), அந்தோணி ஜெயராஜ்குரூஸ் (45), வர்ணகுல சூரிய விக்டர் இம்மானுவேல் (62) ஆகிய 5 பேர் இருந்தனர். உடனடியாக அந்த படகில் இருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

போலீசில் ஒப்படைப்பு

அவர்களையும், படகையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். கைதான 5 மீனவர்களையும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரசிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நீரோட்டம் காரணமாக எல்லை தாண்டி வந்து விட்டதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வந்த படகு மற்றும் படகில் இருந்த சுமார் 100 கிலோ மீன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோர்ட்டில் இன்று ஆஜர்

கைதான 5 மீனவர்களும் இன்று (புதன்கிழமை) ராமேசுவரத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அவர்களை அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story