இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் அதிரடி கைது


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் அதிரடி கைது
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி

இந்திய கடல் பகுதிக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் 'வஜ்ரா'வில் சென்று கண்காணித்தனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றி வளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களையும், படகையும் தூத்துக்குடிக்கு கொண்டு வருகின்றனர்.

அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தூத்துக்குடி வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மீனவர்கள் உரிய விசாரணைக்கு பிறகு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகு, மீனவர்கள் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story