5 டன் பூக்கள் அம்மனுக்கு சாற்றல்


5 டன் பூக்கள் அம்மனுக்கு சாற்றல்
x

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் 5 டன் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. அந்த பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு பூச்சொரிதல் விழா நடைபெறும். அதன்படி பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தம்பதிகள் சிலர் குழந்தை வரம் கேட்டு கரும்பில் தொட்டில் கட்டி வேண்டினர்.

இதேபோல இரவில் பக்தர்கள் பூக்களை தட்டில் எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். மேலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனின் உருவ சிலையை அலங்காரம் செய்தும், பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்நிகழ்வையொட்டி ஆங்காங்கே கச்சேரி மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் புதுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.

பூக்கள் குவிந்தது

கோவிலில் அம்மனை பக்தர்கள் பய, பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விடிய, விடிய கொண்டு வந்த பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாற்றப்பட்டன. இந்த பூக்கள் அம்மனின் கருவறை முழுவதும் நிரம்பி, வெளிப்பகுதியில் பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதியை தாண்டி வரை குவிந்தது. பூக்களுக்கு மத்தியில் அம்மனின் முகத்தை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலெக்டர் கவிதாராமு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் முத்துராமன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

5-ந் தேதி கொடியேற்றம்

கோவிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட பூக்கள் மொத்தம் சுமார் 5 டன் எடை அளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பூக்கள் அனைத்தும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களும் அதனை பக்தியோடு வாங்கிச்சென்றனர்.

கோவிலில் மாசித்திருவிழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் வருகிற 13-ந் தேதி திருத்தேர் விழாவும் நடைபெற உள்ளது.


Next Story