5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்; முதியவர் கைது


5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்; முதியவர் கைது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகனங்களில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

வாகன சோதனை

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று முன்தினம் மாந்தாங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது செம்பட்டிவிடுதியை சேர்ந்த ரெகுநாதன் (வயது 65) என்பவர் 1 டன் ரேஷன் அரிசியை தனது சரக்கு வேனில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பியோடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் 1 டன் ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதேபோல் திருமயம் தாலுகா கே.புதுப்பட்டி- வாழரமாணிக்கம் சாலையில் நேற்று அதிகாலை புதுக்கோட்டை தனி தாசில்தார் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வேன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சரக்கு வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து சரக்கு வேனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்த 3 ஆயிரத்து 948 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து புதுக்கோட்டை குற்றப் புலனாய்வுத்துறை குடிமைப்பொருள் வழங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 சம்பவங்களிலும் தப்பியோடிய டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story