டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே நூதன முறையில் டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே நூதன முறையில் டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர சோதனை
குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரேஷனில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் வாகனங்களில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுப்பதற்காக குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
5 டன் ரேஷன் அரிசி
இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கூண்டு அமைத்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனத்தில் டெம்போவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்ட டிரைவர் டெம்போவை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசார் டெம்போவின் பின்பகுதியை திறந்து சோதனை செய்தனர். சோதனையில் மளிகை பொருட்கள் அடங்கிய மூடைகளுக்கு அடியில் சிறு சிறு மூடைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டெம்போவில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரைவர் கைது
இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் பாறசாலை அடுத்த இஞ்சிவிளையை சேர்ந்த அனில்(வயது 42) என்பதும், ரேஷன் அரிசியை நெல்லை மாவட்டம் பணக்குடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அனிலை கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.