கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவளம், படந்தாலுமூடு, சுங்கான்கடை ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

கோவளம், படந்தாலுமூடு, சுங்கான்கடை ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1½ டன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். அதைத்தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அரிசியுடன் காரையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

படந்தாலுமூடு

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் கார் டிரைவர் களியக்காவிளையை சேர்ந்த சதாம் உசேன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதிகாரிகள் வாகன சோதனை

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கூண்டு வாகனத்தை நிறுத்து முயன்ற போது அது நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.

தொடர்ந்து வில்லுக்குறியில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உடையார்விளை அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story