விவசாயியை தாக்கிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை-ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆத்தூர்:
விவசாயி மீது தாக்குதல்
தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை மாயம்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48).விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7.8.2018 அன்று தங்கராஜ், தனபால் ஆகியோர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது விவசாயி தங்கராஜை, தனபால் மற்றும்அவரது மனைவி பவளக்கொடி, மகன் விஜயகுமார் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டுகட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
5 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் தனபால், பவளக்கொடி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.