மதுபோதையில் பஸ்சை ஓட்டி2 பேர் சாவுக்கு காரணமான டிரைவருக்கு 5 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
மதுபோதையில் பஸ்சை ஓட்டி 2 பேர் சாவுக்கு காரணமான டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விபத்தில் 2 பேர் சாவு
திருச்செந்தூரில் இருந்து சென்னை மார்க்கமாக ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேன், முண்டியம்பாக்கத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பின்னால் விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கிச்சென்ற தனியார் பஸ், வேனின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த திருச்செந்தூரை சேர்ந்த சிவமுருகன் (வயது 46), சிவசேகர் (51) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து கடந்த 2016-ல் நடந்தது. விபத்து குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனியார் பஸ் டிரைவரான மயிலம் அருகே பொம்பூரை சேர்ந்த ராமு (46) என்பவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, டிரைவர் ராமு மற்றும் கண்டக்டரான பண்ருட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (60) ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், மது குடித்துவிட்டு வாகனம் இயக்கி 2 பேரின் இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக பஸ் டிரைவர் ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், கண்டக்டர் தட்சிணாமூர்த்தியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஷெரீப் ஆஜரானார்.