கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்கறிச்சி அணைக்கரைக்கோட்டாலம் அய்யனார் கோவில் பின்புற பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, 3 வாலிபர்கள் கஞ்சாவை பொட்டலம் போட்டுக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் விஜய் (வயது 19), அப்துல்ரசாக் மகன் அபுபக்கர் (28), கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த காந்தி மகன் முரளி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் எடை எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தியாகதுருகம் மலையம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த இனாயத்துல்லா மகன் வாஹித் (வயது 20), கிருஷ்ணா நகர் சுந்தர்ராஜன் மகன் ருத்திஷ் (வயது 23) ஆகியோரை தியாகதுரகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.38 ஆயிரத்து 500 பணம் மற்றும் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ருத்திஷ் என்பவர் மீது ஏற்கனவே கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் வெடிமருந்து தொடர்பான வழக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கம் உள்ளது.