ஆடுகள் திருடிய 5 வாலிபர்கள் கைது


ஆடுகள் திருடிய 5 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஆடுகள் திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஆடுகள் திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆடுகள் திருட்டு

தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 61). இவர் தனது ஆடுகளை வீட்டின் எதிரே உள்ள செட்டில் கட்டி வைத்து இருந்தாா்.

அதில் இருந்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு ஏட்டு கலைவாணர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

அதில் தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் சிவா (20), தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் மகன் ஜோசுவா டேனியல் (19), தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்த பழனிகுமார் மகன் ஜெய்சஞ்சய் (19) ஆகியோர் சேகரின் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், சிவா, ஜோசுவா டேனியல், ஜெய்சஞ்சய் ஆகியயோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (46). இவர் தனது ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கொட்டகையில் கட்டி வைத்துள்ளார்.

இந்த நிலையில் அதில் ஒரு ஆடு திருட்டுபோனது. இதுகுறித்து சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல்லாகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுதாகர் (27), கருப்பசாமி (28) ஆகியோர் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சுதாகர், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story