50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
ஊட்டியில் 50 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
ஊட்டி
ஊட்டியில் 50 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
திடீர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சோிங்கிராஸ், ரெயில் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.
4 கடைகளுக்கு நோட்டீஸ்
இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கபபட்டது.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டம் இல்லாததால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வருவதால், இங்கு வந்து சேர 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் மீன்கள் அழுக அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள் மீன்களை சரிபார்த்து நல்ல மீன்களை மட்டுேம வாங்க வேண்டும். இதேபோல் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனத்தை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.