கொரோனாவால் இறந்த சென்னை துறைமுக பணியாளர்கள் 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம்
கொரோனாவால் இறந்த சென்னை துறைமுக பணியாளர்கள் 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சத்தை மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால் நேற்று வழங்கினார்.
சென்னை,
சென்னை துறைமுகத்தில் பணியாற்றி கொரோனாவால் இறந்த 16 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியும், துறைமுக உபயோகிப்பாளர்கள், பணியாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்வும் சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தன. மத்திய துறைமுகம், கடல்வழி போக்குவரத்துத்துறை மந்திரி சர்வானந்த சோனாவால், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரி ஸ்ரீபாத யசோ நாயக் ஆகியோர் பணியாளர்களின் குடும்பத்துக்கான நிதி உதவியை வழங்கினார்கள்.
தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் நடந்துவரும் பணிகளையும், கப்பல் நிறுத்தும் இடங்களையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துறைமுக தலைவர் சுனில் பாலிவால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
நவீன கருவி திறப்பு
தொடர்ந்து கன்டெய்னர்களை ஸ்கேன் செய்யும் நவீன கருவியை சர்வானந்த சோனாவால் தொடங்கிவைத்தார்.
மத்திய மந்திரிகள் வருகையையொட்டி, துறைமுகத்தில் கப்பல் நிற்கும் தளம் அருகில் 300 பணியாளர்கள் தேசிய கொடியின் மூவர்ணம் போன்று நின்று வரவேற்றனர்.
மீன்பிடித்தளங்கள்
பின்னர் மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சகார் மாலா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களும் நவீனபடுத்தப்படுவதுடன், சரக்குகள் கையாளும் திறனும் அதிகரிக்கப்படுகிறது. அதேபோல் துறைமுகங்களை இணைப்பது, நீர்வழி போக்குவரத்தை எளிமைப்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் மேற்கு பகுதியைப் போல கிழக்கு பகுதியில் உள்ள துறைமுகங்களும் நவீனப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய துறைமுகங்களில் நவீன மீன்பிடித்தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுகத்தில் இந்த பணி ரூ.99 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
சுத்தப்படுத்தப்படும் 75 கடற்கரைகள்
குளச்சல் துறைமுகம் தொடர்பாக பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும். 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 75 கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். அந்த வகையில் சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
சவாலை சந்திக்க தயார்
இலங்கைக்கு சீன நாட்டின் உளவு கப்பல் வருகை தந்துள்ளதால் இந்திய கடல் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'எத்தகைய சவாலையும் கையாள இந்தியா தயாராக உள்ளது' என்றார்.