ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தப்பட்டு வரும் தங்கத்தை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதில் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பெண் உள்பட 2 பயணிகள் கடத்தி வந்த ரூ.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் பறிமுதல்
இந்நிலையில் நேற்று அதிகாலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அதில் ஒருவர் திருச்சியை சேர்ந்த கவிராஜ் ராமசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணிகளிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகளிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.