அரும்பாக்கம் கொள்ளை வழக்கு: கூட்டாளிகளுக்கு தலா ரூ.50 லட்சம் தருவதாக பேசியது அம்பலம்
அரும்பாக்கம் நகைக்கடை வங்கி கொள்ளை வழக்கில் கூட்டாளிகளுக்கு தலா ரூ.50 லட்சம் தருவதாக பேசியது தெரியவந்துள்ளது.
அரும்பாக்கம், ராசாக் கார்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடன் வங்கி செயல்பட்டு வருகி இங்கு பணிபுரிந்த மண்டல மேலாளர் முருகன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தார்.
இந்த வழக்கில் முருகன் அவரது கூட்டாளிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் என எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அரும்பாக்கம் போலீசார் முருகன், சூர்யா, செந்தில்குமரன் ஆகிய மூன்று பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அம்பத்தூர், பாடி குப்பம் பகுதியில் உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வந்த முருகன் அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடன் வங்கியில் மண்டலம் மேலாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். போதிய பணம் இல்லாததால் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு வங்கியில் நகைகளை எப்படி கொள்ளையடிக்கலாம் என தன்னுடைய நண்பர்கள் சந்தோஷ், செந்தில்குமாரன், பாலாஜி ஆகியோருடன் ஒரு மாதமாக சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி பணமாக பெற்ற பின்பு கூட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சம் பணம் தருவதாக பேசியதாகவும் இதனால் கூட்டாளிகள் இரண்டு கார்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் கொடுத்து வங்கியில் நகைகளை கொள்ளை அடித்து தப்பி செல்வதற்கு துணையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முருகனிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், கத்தியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.