பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வடலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடலூர்,
45-வது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு மற்றும் வள்ளலார் 200-வது அவதார தின விழா வடலூரில் நடைபெற்றது. இதற்கு சாது சிவராம அடிகளார் தலைமை தாங்கினார். திருக்கண்டீஸ்வரம் ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன், திண்டுக்கல் சங்கரசுப்பிரமணியன், வடலூர் தலைமை சன்மார்க்க சங்க தலைவர் அருள்நாகலிங்கம், அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி தலைவர் பண்ணை ரவி, துணை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முதல் உலக மூத்த குடிமகன் இயக்க தலைவர் அசோக்குமார், மூலிகை அணுக்கள் விஞ்ஞானி புருஷோத்தமன், டாக்டர் சேதுராமன், சுசான்லி இயக்குனர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், தடை செய்யப்பட்ட மான்கொம்பு பஷ்பம் என்னும் சிரிங்கி பஷ்பத்தை மக்களின் உடல் நலத்தை காக்க அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பதிவில்லா 60 வயதை கடந்த பரம்பரை வைத்தியர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
50 சதவீத இடஒதுக்கீடு
அழிந்து வரும் சிவகரந்தை, அமிர்த சஞ்சீவி, பாராங்கல்லில் வளரும் சோத்து கற்றாழை போன்ற பல்வேறு மூலிகைகளை அரசே ஏற்று பண்ணைகள் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாணவ-மாணவிகளுக்கிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் துணை தலைவர்கள் தனபால், ரூமி.ராஜசேகரன், சென்னை பாஸ்கர், வக்கீல் ராஜா, ராமர், பொருளாளர் ரவி, கடலூர் மெஹருன்னிசா, சந்திரன், சிவக்குமார், இளங்கோவன், வேல்முருகன், ஷம்சுதின், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.