மதுரையில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு மதுரையில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
திருமங்கலம்,
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு மதுரையில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநில இளைஞர் அணி மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17- ந் தேதி நடைபெற உள்ளது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் சேலம் மாநாட்டிற்கு குறைந்தது 50 ஆயிரம் பேர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
50 ஆயிரம் பேர்
இதை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
மதுரை வடக்கு, தெற்கு மாவட்டம் என பிரித்து பார்க்காமல் இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு இளைஞர்கள் ஒரு பூத்திற்கு 25 பேர் வீதம் சுமார் 25 ஆயிரம் பேர் வடக்கு மாவட்டத்திலும், அதே போல் பூத்துக்கு 25 பேர் வீதம் 25 ஆயிரம் பேர் தெற்கு மாவட்டத்திலும் இளைஞர் அணி செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் பொற்கிழிகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. மாநாட்டை விட அதிகப்படியான தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்துக்கு அவை தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில விவசாய பிரிவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், மீனவர் அணி செயலாளர் ஆலங்குளம் செல்வம், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் தனபாண்டி, ஆலம்பட்டி சண்முகம் மதன்குமார், கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னச்சாமி, திருக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலவச சைக்கிள் வழங்கும் விழா
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கோரிக்கையை ஏற்று ரூ.3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மணிமாறன் தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் கவுன்சிலர்கள் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.