ஓசூர் பகுதிக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே ஓசூர் பகுதிக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நாட்டறம்பள்ளி அருகே ஓசூர் பகுதிக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே வாணியம்பாடி போக்குவரத்துப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் தலைமையில் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஆந்திர மாநில பதிவெண்கொண்ட ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில், அதில் 50 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
டிரைவர் கைது
தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து லாரியோடு ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில் லாரி டிரைவர் பேரணாம்பட்டு செர்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 54) என்பதும், குடியாத்தத்தில் இருந்து ஓசூர் பகுதிக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் சரவணனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த 50 டன் ரேஷன் அரிசியை போலீசார் திருப்பத்தூர் உணவுப் பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.