தேனீக்கள் கொட்டி 50 தொழிலாளர்கள் காயம்
நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 50 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
நத்தம் அருகே உள்ள பண்ணுவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னபள்ளபட்டியில் ஏழுமடை கண்மாய் உள்ளது. இங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எங்கு இருந்தோ கூட்டமாக பறந்து வந்த தேனீக்கள் பெண் தொழிலாளர்களை விரட்டி, விரட்டி கொட்டின. இதனால் அங்கிருந்த பெண்கள், அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில், 50 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காயமடைந்த தொழிலாளர்கள், சிறிதுநேரத்தில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
முன்னதாக அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களை முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.