சூறைக்காற்றால் 500 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்
கடலூரில் பகலில் 103.64 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்து குளிர்வித்தது. சூறைக்காற்றால் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. புளியமரங்களும் வேரோடு சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
சூரியன் தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் தவியாய் தவித்தனர்.
கடலூரில் நேற்று 4-வது நாளாக வெயில் சதம் அடித்தது. அதாவது நேற்று 103.64 டிகிரி வெயில் கொளுத்தியது. இதை காலை முதலே உணர முடிந்தது. காலை 8 மணிக்கே சூரியன் சுட்டெரித்தது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலை மாலை வரை நீடித்தது.
வாழைகள் சேதம்
இதற்கிடையே மாலை 4.30 மணி அளவில் கடலூர் அருகே ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் இடி, மின்னலுமாக இருந்தது.
இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளும் சேதமானதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். 500 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் மக்காச்சோள பயிரும் சேதமானது.
இதைத்தொடர்ந்து கடலூரிலும் மாலை 6 மணி அளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழை கொட்டியது. இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
குளிர்வித்த மழை
மழையால் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காகவும், நடைபயிற்சிக்காகவும் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் மழையில் நனைந்தபடி விளையாடியதை பார்க்க முடிந்தது.
பகலில் சுட்டெரித்த வெயிலால் தவித்த மக்களை மாலையில் வருண பகவான் குளிர்வித்தார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் மழை வேண்டும் என்ற வேண்டிய விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மழை மற்றும் சூறைக்காற்றால் பயிர்கள் சேதமானதால் ஒரு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேரோடு சாய்ந்த புளியமரங்கள்
சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோமங்கலத்தில் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றிருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது பற்றி அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், பொக்லைன் எந்திரத்துடன் விரைந்து வந்து புளியமரத்தை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
இதேபோல் விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் சத்தியவாடி அருகே புளியமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.