தமிழகத்தில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும்; சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு


தமிழகத்தில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும்; சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
x

தமிழகத்தில் இந்த ஆண்டு 500 மதுக் கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் தரும் துறைகளில் டாஸ்மாக் முதல் இடத்தில் உள்ளது.

மதுக்கடைகளை குறைக்க கோரிக்கை

கடந்த 2003-04-ம் நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சமாக இருந்த டாஸ்மாக் வருவாய் 2022-23-ம் ஆண்டில் ரூ.44 ஆயிரத்து 98 கோடியே 56 லட்சமாக அதிகரித்து உள்ளது.

அதே வேளையில் மது குடிக்கும் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக அமைவதால் 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது.

அமைச்சர் அறிவிப்பு

இந்தநிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

அதில் இந்த ஆண்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

500 மதுக்கடைகள் மூடப்படும்

* தமிழ்நாட்டில், மாநில வாணிப கழகத்தில் (டாஸ்மாக்) 31.3.2023 நிலவரப்படி மொத்தம் 5 ஆயிரத்து 329 சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும்.

* கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும்.

* மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான பயன்பாட்டுக்கு பயன்படுத்தலுக்கும் எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் எரிசாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் மாவட்ட, நகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

2023-24-ம் நிதி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இது பற்றி ரகசிய தகவல் அளிக்கும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

* 'டாஸ்மாக்' நிறுவனத்தில் 6 ஆயிரத்து 648 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள், 2 ஆயிரத்து 876 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 318 மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.930-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840-ம் மாதந்தோறும் கூடுதலாக உயர்த்தி 1.4.2023 முதல் வழங்கப்படும்.

* 500 மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் ரூ.16 கோடி செலவில் பொருத்தப்படும்.

* 'டாஸ்மாக்' சில்லரை விற்பனை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் ரூ.5 லட்சமாக 1.4.2023 முதல் உயர்த்தி வழங்கப்படும்.

* கிராமம் மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளின் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த நிதி ஆண்டில் 1,000 மதுக்கடைகளில் ரூ.10.3 கோடி செலவில் பண பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார்.


Next Story