ஆட்டோ வாங்க 500 பெண் டிரைவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்
சுய தொழில் வாய்ப்பை உருவாக்கும் வகையில் 500 பெண் டிரைவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2021 மே 7-ந்தேதி முதல் இந்த ஆண்டு மே 31-ந்தேதி வரை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 13 லட்சத்து 80 ஆயிரத்து 695 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 11 லட்சத்து 81 ஆயிரத்து 905 பயனாளிகளுக்கு ரூ.914.27 கோடி நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் டிரைவர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும் 500 பெண் டிரைவர்களுக்கு புதியதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பதிவு சான்று
இத்திட்டத்தின் கீழ் மானியத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 141 பயனாளிகளில் 10 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மைச் செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிராம கோவில்களுக்கு நிதியுதவி
அதனைத்தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 1,250 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் கோவில்களில் பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக, 20 கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பான பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் திரு. க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.