4 நகராட்சிகளில் 504 பகுதி சபாக்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 504 பகுதி சபாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாறா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 504 பகுதி சபாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாறா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வார்டு குழு, பகுதி சபா.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி மற்றும் 3 பேரூராட்சிகளில் வார்டு குழு, பகுதி சபா எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டங்களை இன்று (செவ்வாய்கிழமை) வாணியம்பாடி நகராட்சியில் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.
அதன்படி திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டு குழு, 144 பகுதி சபா, ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டு குழு, 72 பகுதி சபா, வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டு குழு. 144 பகுதி சபா, ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டு குழு, 144 பகுதி சபா என மொத்தம் 126 வார்டு குழு, 504 பகுதி சபா அமைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி
இதேபோல் ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் தலா 15 வார்டு குழு, தலா 45 பகுதி சபா என மொத்தம் 45 வார்டு குழுவும், 135 பகுதி சபாவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த வார்டில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பட்டியல், அரசின் அனைத்துத்துறை திட்டங்களினால் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல், இதுநாள் வரை வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்கள் பட்டியல் மற்றும் வரியில்லா இனங்களில் நிலுவை வைத்துள்ளர்வர்கள் பட்டியல், தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் விவரமும் இடம்பெறலாம். 3 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.