முத்துமாரியம்மன் கோவிலில் 508 பெண்கள் பால்குட ஊர்வலம்
ஆரணியில் முத்துமாரியம்மன் கோவிலில் 508 பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
ஆரணி
ஆரணி பள்ளிக்கூட தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத விழாவையொட்டி அக்கினி வெயிலை சமாளிக்கும் வகையிலும், பொதுமக்களை அக்கினி வெயிலை வாட்டி வதைக்க கூடாது என்பதற்காக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து குளிரூட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆரணி கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அருகில் உள்ள கங்கையம்மன் கோவிலில் இருந்து 508 பெண்கள் பால்குடங்கள் ஏந்தியும் முத்து மாரியம்மனை பூங்கரகம் ஜோடித்து ஊர்வலமாக தாரை தப்பட்டைகளுடன் நகரின் முக்கிய வீதிகளான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், பள்ளிக்கூட தெரு, கோட்டை மைதானம் வழியாக கோவிலை அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களை பெற்று சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் அ.கோவிந்தராசன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், வி.தேவராஜ், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.