51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி
51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த காரணமாக வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், தற்போது தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, மாதத்தில் ஒருநாள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 31-வது சிறப்பு தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் 1,458 இடங்களில் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 51 ஆயிரத்து 751 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் முதல் தவணை தடுப்பூசி 18,850 பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 28,901 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 4 ஆயிரம் பேரும் போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் தெரிவித்தார்.