நெல்லை கோட்டத்தில் இருந்து 512 சிறப்பு பஸ்கள் இயக்கம்
புத்தாண்டையொட்டி நெல்லை கோட்டத்தில் இருந்து 512 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டம் சார்பில் ஆங்கில புத்தாண்டையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாளை (சனிக்கிழமை), 1-ந் தேதி, 2-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னைக்கு 90 பஸ்கள், கோயம்புத்தூருக்கு 70 பஸ்கள், திருப்பூருக்கு 55 பஸ்கள், திருச்சிக்கு 27 பஸ்கள், மதுரைக்கு 130 பஸ்கள் என மொத்தம் 372 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் திருச்செந்தூர் மற்றும் நாலுமாவடிக்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து 140 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் தங்கள் போக்குவரத்து தேவைகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.