காரில் கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் கஞ்சா கடத்தல் கார் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருசில பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது திண்டுக்கல் காந்திஜிரோடு பகுதியில் ஒரு வீட்டில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளரான அருண்குமார் (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக காரில் 52 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் முன்னாள் போலீஸ்காரரான அருண்குமார், சிதம்பரனார் தெருவை சேர்ந்த சுரேஷ் (42), சேலத்தை சேர்ந்த யோகராஜ் (25) ஆகியோருடன் சேர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து, மற்றொரு நபருக்கு விற்க வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதோடு கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், கடத்தல் பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.