வியாபாரி வீட்டில் 65 பவுன் நகை, ரூ.2½ லட்சம் கொள்ளை


வியாபாரி வீட்டில்  65 பவுன் நகை, ரூ.2½ லட்சம் கொள்ளை
x

குமாரபுரம் அருகே வாழைத்தார் வியாபாரி வீட்டில் 65 பவுன் நகை, ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை:

குமாரபுரம் அருகே வாழைத்தார் வியாபாரி வீட்டில் 65 பவுன் நகை, ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாழைத்தார் மொத்த வியாபாரி

குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே ஈத்தவிளை செக்கடிவிளையை சேர்ந்தவர் சோமன் (வயது 55). இவர் வாழைத்தார்களை கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் கேரளாவில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு சோமன் தனது மனைவி மற்றும் மகளோடு அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

நகை-பணம் கொள்ளை

பின்னர் காலை 10.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் சோமன் முன்பக்க கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.

உடனே பின்பக்க கதவை சென்று பார்த்தபோது தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கட்டிலில் இருந்த ரகசிய பகுதியில் மறைத்து வைத்திருந்த 65 பவுன் நகைகள், ேமஜையை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 47 ஆயிரமும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்பத்துடன் ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

போலீஸ் தேடுகிறது

இதுகுறித்து ேசாமன் கொற்றிகோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. அது சோமனின் வீட்டில் இருந்து அருகில் உள்ள தனியார் தோட்டம் வரை சென்று விட்டு மீண்டும் கொள்ளை நடந்த வீட்டிற்கு திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.


Next Story