நீலகிரியில் 52,418 பேருக்கு சிகிச்சை


நீலகிரியில் 52,418 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 52,418 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 52,418 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

மருந்து பெட்டகம்

குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் திட்ட பயன், நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள், தேவையான மருந்துகளை இல்லங்களுக்கு பணியாளர்கள் கொண்டு வந்து தருகிறார்களா என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர்கள், 5 இயன்முறை டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 128 இடைநிலை சுகாதார சேவையாளர்கள், 61 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும் மக்களை தேடி மருத்துவ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ சேவை

நீலகிரியில் மக்கள் தொகை 7,29,576. 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,53,019 பேர் ஆவர். இதில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை பெற்றவர்கள் 4,95,213 நபர்கள், உயர் ரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 21,143 பேர், நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 6,113 பேர் பயன் அடைந்து உள்ளனர். ஒவ்வொரு பயனாளியும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மக்கள் நலபதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்காக 27,792 பேரும், நீரிழிவு நோய்க்காக 10,025 பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்காக 9,414 பேரும், நோய் ஆதரவு சிகிச்சைக்காக 2,657 பேரும், இயன்முறை சிகிச்சைக்காக 2,424 பேரும், வாய் புற்றுநோய் சிசிச்சைக்காக 10 பேரும், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக 74 பேரும், கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக 22 பேரும் என மொத்தம் 52,418 பேர் முதன் முறையாக மருத்துவ சேவை பெற்று உள்ளனர். மேலும் தொடர் சேவையாக 1,35,987 பேர் பயனடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story