கடலில் மிதந்து வந்த ரூ.55 லட்சம் கஞ்சா பார்சல்கள்
கடலில் மிதந்து வந்த ரூ.55 லட்சம் கஞ்சா பார்சல்கள்
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று மாலை மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திலிருந்து ஹோவர் கிராப்ட் கப்பல் ஒன்றில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது மற்றும் 3-வது மணல் திட்டுக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மிதந்து வந்த சாக்கு பை ஒன்றை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 20 பார்சல்கள் இருப்பதும், அந்த பார்சல்கள் அனைத்திலும் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதன் எடை 57 கிலோ இருந்தது. இந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.55 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதைதொடர்ந்து கடலோர காவல் படையினர் கப்பல் மூலம் இந்திய கடல் எல்லை வரை வேறு ஏதேனும் பார்சல்கள் மிதந்து வருகின்றதா? சந்தேகப்படும்படியான படகுகளோ, நபர்களோ யாரும் உள்ளார்களா என தேடி பார்த்தனர். ஆனால் யாரும் இல்லாததால் கஞ்சா பார்சல்களை கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த கஞ்சா பார்சல்கள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக படகில் கஞ்சா பார்சல்களை இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது கடற்படையினரின் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.