பழனி முருகன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் வருவாய்
பழனி முருகனுக்கு கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.55 லட்சம் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் நவதானியங்களை உண்டியலில் செலுத்துகின்றனர். இவை நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 8, 9-ந்தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்தநிலையில் கோவிலில் உள்ள அன்னதான மற்றும் நவதானிய உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து அவற்றை திறந்து அதிலுள்ள காணிக்கை பொருட்களை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்களில் இருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள், நவதானியங்கள் ஆகியவை கோவில் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன. இந்த பணிக்கு பணிக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.54 லட்சத்து 36 ஆயிரத்து 192 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 76 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 45 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 18 கிலோ 965 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. நவதானியங்களும் காணிக்கையாக கிடைத்தன.