சீறிவந்த காளைகள் முட்டி 55 பேர் காயம்
காரியாபட்டி அருகே சீறி வந்த காளைகள் முட்டியதில் 55 பேர் காயம் அடைந்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சீறி வந்த காளைகள் முட்டியதில் 55 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் ஆகியோரது தலைமையிலும், தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலையிலும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
55 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு பிடித்தனர். இதில் 55 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 9 பேர் காரியாபட்டி, விருதுநகர், மதுரை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, அண்டா, மிக்சி, டி.வி. உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடிய காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு காருன் காரட் உத்தராவ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.