பெரம்பலூரில் ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜனதாவினர் 58 பேர் கைது


பெரம்பலூரில் ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜனதாவினர் 58 பேர் கைது
x

மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி பெரம்பலூரில் ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜனதாவினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

சாதனைகளை விளக்கி ஊர்வலம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டியும், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கியும் பெரம்பலூரில் மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக பெரம்பலூர் பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் சாந்தி ஆகியோர் தலைமையில் கட்சியினர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு கூடினர்.

இதையடுத்து அவர்கள் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி புதிய பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட தயாராக நின்றனர்.

58 பேர் கைது

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் ஊர்வலம் செல்ல போலீசாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை. அனுமதியின்றி ஊர்வலம் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று பா.ஜனதாவினரை எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அதையும் மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

இதையடுத்து, போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜனதாவினர் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற 21 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக பா.ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா கைதானவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு செய்த திட்டங்களை, தமிழக அரசின் திட்டங்கள் என்று தி.மு.க. மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர், என்றார்.


Next Story