ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் 58 பேர் கைது
ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியில் கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதன்படி ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று ரெயில் மறியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியினர் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே ஒன்று திரண்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல செயலாளர் சிவா, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அறிவு தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
58 பேர் கைது
மாவட்ட பொருளாளர் சலீம்பாஷா, செய்தி தொடர்பாளர் அறிவழகன், ஊடக பிரிவு செயலாளர் ஆனந்த், மாநகர செயலாளர் அப்துல் சமது, மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, இளம்புலிகள் மாநகர செயலாளர் அலெக்ஸ், மாணவர் அணி செயலாளர் பிரபு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலுக்காக அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ரெயில் நிலையம் அருகே சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 'மணிப்பூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும். மணிப்பூர் மாநில முதல் -மந்திரியை கைது செய்ய வேண்டும். 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அனைவரையும் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறியபடி, ரெயில் மறியலுக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.