"58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் பாதுகாக்கப்படும்"
கல்குவாரி, வெடிமருந்து தொழிற்சாலையால் அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகளிடம், கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் பெருமாள்சாமி, கஸ்தூரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
கொப்பரை கொள்முதல்
பழனிவேல்:- கடந்த 2 மாதங்களாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர். எனவே கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரித்து உடனடியாக தொடங்க வேண்டும்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- அரசு நிர்ணயித்த அளவு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. எனவே தென்னை விவசாயம் அதிகமாக இருப்பதால் கொப்பரை கொள்முதல் அளவை 3,500 டன்னாக உயர்த்தும்படி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணமூர்த்தி:- குஜிலியம்பாறை பகுதியில் பாசன கிணற்றின் அருகே பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துச்சாமி:- மழைக்காலத்தில் சிறுமலையில் இருந்து உருவாகும் ஓடைகளில் ஓடும் தண்ணீர் வீணாகிறது. சிறுமலையின் அடிவாரத்தில் கால்வாய் அமைத்து தண்ணீரை சேமித்து, பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.
கலெக்டர்:- இதுதொடர்பாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வனவிலங்குகள் தொல்லை
அசோகன்:- வில்பட்டியில் விவசாய நிலத்துக்கு பாதை அமைப்பதில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க வேண்டும்.
கலெக்டர்:- வனத்துறையினர், விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளிடம் பெறும் மனுக்களை பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி:- குடகனாறு நீர்பங்கீடு தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். குடகனாறு அணையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை மழைக்கு முன்பு வெளியேற்ற வேண்டும். வலது கால்வாய் பராமரிப்பு நடப்பதால் உபரிநீரை பிற குளங்களுக்கு வழங்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரி:- குடகனாறு அணையில் இருக்கும் மண் அகற்றப்படும். அதேநேரம் அணைக்கு ஒதுக்கப்படாத குளங்களுக்கு தண்ணீர் வழங்க இயலாது. எனவே விவசாயிகள் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தொட்டி பாலம்
ராமசாமி:- ஆயக்குடியில் 10 யானைகள் சுற்றித்திரிவதால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். இதுதவிர பன்றிகள், காட்டெருமைகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வத்தலக்குண்டு பகுதி வழியாக செல்லும் 58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் அருகே கல்குவாரி, வெடிமருந்து தொழிற்சாலை போன்றவை உள்ளன. இதனால் தொட்டி பாலம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், கல்குவாரி, வெடிமருந்து தொழிற்சாலையை மூட வேண்டும்.
இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், "தொட்டி பாலத்தின் தூண்களுக்கு இடையே லாரிகள் செல்கின்றன. மேலும் கல்குவாரியில் வெடி வைப்பதால் தொட்டி பாலம் சேதமாகும் அபாயம் உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கல்குவாரி, வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவை மூட வேண்டும் என்றனர்.
கலெக்டர்:- இதுபற்றி எனக்கு தெரியவந்த உடனே ஆர்.டி.ஓ. தலைமையில் அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டேன். அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் என்னிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். விவசாயிகள், பொதுமக்களின் நலனுக்கு தொட்டி பாலம் மிகவும் முக்கியம். எனவே தொட்டி பாலத்தை பாதுகாக்கும் வகையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.