580 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சதுர்த்தி விழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 580 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
சதுர்த்தி விழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 580 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயக பெருமானுக்கு கொலுக்கட்டை, சுண்டல், பாயசம் உள்ளிட்ட நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 580 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தூத்துக்குடியில் விசுவரூப விநாயகர் மற்றும் பல்வேறு வாகனங்களில் அமர்ந்த விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தூத்துக்குடி மாநகரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால், அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் சிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சிலைக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைக்கு அமைக்கப்பட்டு உள்ள பந்தல் பாதுகாப்பான தகரத்தால் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலில் கரைப்பு
விநாயகர் சிலைகள் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் முடிந்த பிறகு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தபசு மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் சங்கு முக விநாயகர் கடற்கரையில் கரைக்கப்படுகிறது.