சேலத்தில் காரில் கடத்திய 580 கிலோ குட்கா பறிமுதல்-3 பேர் கைது
சேலத்தில் காரில் கடத்தி வந்த 580 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொண்டலாம்பட்டி:
குட்கா
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர், ஒரு காரில் இருந்து மூட்டைகளை, மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தள்ளாராம் (வயது 30), சேலம் அன்னதானப்பட்டி மணியனூரை சேர்ந்த லிங்கராஜ் (36) மற்றும் முகமது நிஸ்பர்தீன் (27) ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து காரில் 30 மூட்டைகளில் 580 கிலோ குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் சேலத்தில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்றியபோது அவர்கள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தள்ளாராம், லிங்கராஜ், முகமது நிஸ்பர்தீன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 580 கிலோ குட்கா, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.