வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 5,884 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 5,884 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 707 ஆண்கள், 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 153 பேர் என்று 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் அளிக்க மாவட்டம் முழுவதும் 651 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இதில், 4,370 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பெயர் சேர்க்க 4,238 பேரும், நீக்கம் செய்ய 362 பேரும், திருத்தம் மேற்கொள்ள 1,284 பேரும் என்று மொத்தம் 5,884 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர். வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடர்பாக 10,254 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.