தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் கையாடல்
ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.59 லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரூ.59 லட்சம் கையாடல்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார் புதூரை சேர்ந்தவர் செல்வ பிரகாஷ் (வயது29.) இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் நிதி நிறுவன நிர்வாகத்தை ஊழியர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.
திருமணம் முடிந்து மீண்டும் நிதி நிறுவனத்துக்கு வந்த செல்வபிரகாஷ், கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை சரிபார்த்தார். அதில் ரூ.59 லட்சம் பல்வேறு நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக ஆவணங்களில் எழுதப்பட்டு இருந்தது. இதனால் ஆவணங்களில் இருந்த முகவரிகளுக்கு சென்று அவர் விசாரித்தார். அப்போது போலியாக கணக்கு எழுதியது தெரியவந்தது. இதற்கிடையே 5 ஊழியர்கள் வேலையை விட்டு நின்று விட்டனர்.
2 பேர் கைது
இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வபிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது நிதிநிறுவனத்தில் 5 பேர் சேர்ந்து பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அதில் சாமியார்புதூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (23), ரகுராம் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ஜெயபிரகாஷ் தனியாக நிதி நிறுவனம் நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.