வாலிபரை தாக்கி செல்போன் வழிப்பறி செய்த 6 பேர் கைது
பல்லடம் அருகே வாலிபரை மிரட்டி செல்போன் வழிப்பறி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் பறிப்பு
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி தனது நண்பர் முருகேசனுடன் சுக்கம்பாளையம் சென்று கொண்டிருந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா ரோட்டில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கு பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 ஆசாமிகள் வந்தனர்.அவர்கள் திடீரென்று சசிகுமாரை வழிமறித்து, தாக்கி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
6 பேர் கைது
அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் காசிராமன்(23), கருப்பசாமி மகன் பேச்சிமுத்து(24), இசக்கி முத்து மகன் இசக்கி பாண்டி(32), தூத்துக்குடி மாவட்டம் சேதுங்க நல்லூர் முருகேசன் மகன் மணிகண்டன்( 27), கொம்பையா மகன் சுரேஷ்(23), பல்லடம் தாராபுரம் ரோடு சின்னத்துரை மகன் ராஜேஷ் குமார்(25) என்றும், இவர்கள் 6 பேரும் சசிகுமாரிடம் செல்போன் பறித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை கொள்ளை கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.