ரூ.70 கோடி நில அபகரிப்பில் 6 பேர் கைது


ரூ.70 கோடி நில அபகரிப்பில் 6 பேர் கைது
x

புதுக்கோட்டையில் அரசு, தனியார் நிலங்களை போலியாக பத்திரப்பதிவு செய்து ரூ.70 கோடி நில அபகரிப்பில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆள் மாறாட்டம் செய்தும், ஆவணங்களை தயாரித்தும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

புதுக்கோட்டை


அரசு நிலம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான மனை, கிடங்கு உள்ளிட்டவை 2 ஆயிரத்து 148 சதுர மீட்டர் அளவில் உள்ளது. அரசு நிலமான இதனை வேறொருவர் பெயருக்கு பட்டா மாற்றி, அவரிடம் இருந்து வேறொருவருக்கு இனாம் செட்டில்மென்ட் ஏற்படுத்தியும், அவரிடம் இருந்து மற்றொருவர் பவர் பெற்றது போலவும் போலியான ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்து ஒரு கும்பல் நில அபகரிப்பில் ஈடுபட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அதிகாரி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

6 பேர் கைது

இதேபோல மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களை போலியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் நில அபகரிப்பில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலில் 6 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரிமன்னன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதில் புதுக்கோட்டையை சேர்ந்த போஸ் (வயது58), ராஜமாணிக்கம் (56), சாலை அபிஷேகன் (55), கண்ணன் (38), சரவணன் (27), சுப்பிரமணியன் (44) ஆகியோர் ஆவர். இதில் சுப்பிரமணியன் நெல்லையை சேர்ந்தவர். தற்சமயம் மதுரையில் வசித்து வந்துள்ளார். கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆள் மாறாட்டம்

இது குறித்து போலீசார் கூறுகையில், ''இந்த மோசடியில் முக்கியமானவர்கள் போஸ், ராஜமாணிக்கம், சாலை அபிஷேகன் ஆகியோர் தான். கண்ணன் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து வந்துள்ளார். மற்ற 2 பேர் உதவியாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் நில புரோக்கர்களாக செயல்பட்டு காலியிடங்கள் மற்றும் நிலங்களை கண்காணித்து வந்துள்ளனர். அதன் உரிமையாளர் பற்றி தெரிந்தும், தற்போது அவர்கள் உள்ளூரில் வசிக்காமல் வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் விவரங்களை தெரிந்து கொண்டும் போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இறந்தவர்களின் நிலங்களை கண்காணித்தும் அவர்களது பெயரில் போலி ஆவணம் தயாரித்தும் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். பத்திரப்பதிவுக்கு ஆள் மாறாட்டங்களையும் செய்துள்ளனர். போலி ஆவணங்களை உண்மையானவை போன்றே தயாரித்துள்ளனர். நிலத்தின் உரிமையாளர்கள் நிலங்களை விற்கும் போதோ, வில்லங்க சான்றிதழ் போட்டு பார்க்கும் போதோ போலி ஆவணங்கள் மூலம் வேறொருவருக்கு பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது. அந்த வகையில் தான் இந்த மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றனர். நில அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்களின் மொத்த மதிப்பு ரூ.70 கோடி வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்து வந்து நில அபகரிப்பு வழக்குகளில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story