ரூ.6 கோடியில் சுகாதார நலத்திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டு விழா
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6 கோடியில் சுகாதார நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6 கோடியில் சுகாதார நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அடிக்கல் நாட்டு விழா
மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்யாணசுந்தரம் எம்.பி.க்கு கிடைத்துள்ள நிதியில் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் காத்திருக்கும் கூடம் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும், அம்மாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ரூ. 75 லட்சம் மதிப்பீட்லும், தேசிய நல வாழ்வு குழும நிதி ரூ.1.20 கோடியில் திப்பிராஜபுரம் சேஷ்டம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.22.75 லட்சம் மதிப்பீட்டில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ பணிகள் கும்பகோணம் இணை இயக்குனர் திலகம் வரவேற்றார். விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டிபணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
டாக்டர் பற்றாக்குறை
தமிழகத்தில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்களில் 2,500 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டிடம் கட்டும் நிலையில் உள்ளன.இதற்கு நிதி அதிக அளவு தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் இருந்தால் தான் துணை சுகாதார நிலையங்களை புதிதாக கட்ட முடியும். கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு உள்ள 3 காலி இடத்திற்கு விரைவில் புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், கும்பகோணத்தில் 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், பட்டுக்கோட்டையில் ஒன்றும் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளன.
2 நாட்கள் ஆய்வு
நான் வாரத்திற்கு 2 நாட்கள் ஒரு மாவட்டத்தில் ஆய்வு செய்து அங்கு மக்களுக்கு தேவையான சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, நிவேதா முருகன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சுப தமிழழகன், கோட்டாட்சியர் பூர்ணிமா, மாநகர ஆணையர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் முத்துச்செல்வம், ஒன்றியக்குழு தலைவர்கள் காயத்ரி அசோக்குமார், தேவி ரவிச்சந்திரன், சுபா திருநாவுக்கரசு, சுமதி கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார பணிகள் தஞ்சாவூர் துணை இயக்குனர் கலைவாணி நன்றி கூறினார்.