ரூ.6½ கோடி மோசடி; முன்னாள் வங்கி ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரூ.6½ கோடி மோசடி; முன்னாள் வங்கி ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரூ.6½ கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

மணப்பாறை வைகைகுளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் லட்சுமிகாந்த். இவர் திருச்சி பொன்நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகை அடகு பிரிவில் வேலை பார்த்து வந்தார். அப்போது, இவர் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் ஏலத்திற்கு வரும்போது தெரிந்த ஆட்களை வைத்து ஏலம் எடுத்து அதிக லாபத்தில் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி 3 பேரிடம் ரூ.6 கோடியே 65 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். லட்சுமிகாந்த் தொடர்ந்து தனிநபர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணமோசடி குற்றங்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என விசாரணையில் தெரியவந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள லட்சுமிகாந்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story