சென்னை பஸ் மீது லாரி மோதி 6 பேர் பலி
சென்னை வந்த ஆம்னி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 63). தையல் தொழிலாளி. இவருடைய மகள் தீபா, சென்னையில் வசித்து வருகிறார். அவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த விழாவில் பங்கேற்க திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் சென்னைக்கு செல்ல முடிவு செய்து, சேலத்தில் இருந்து செல்லும் ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் அனைவரும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது, சேலத்தில் இருந்து புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்து, தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றது.
லாரி மோதியது
இதையடுத்து திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த சீர்வரிசை பொருட்களை பஸ் கிளீனர் தீபன் (24) உதவியுடன் பஸ்சின் வலது புற பகுதியில் உள்ள லக்கேஜ் பெட்டியை திறந்து வைத்து கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சின் பின்னால் உரசியதுடன், சீர்வரிசை பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் கிளீனர் உள்பட 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
6 பேர் பலி
இந்த விபத்தில் திருநாவுக்கரசு, அவரது மகன் ரவிக்குமார் (41), உறவினரான செந்தில்வேலன் (46), சுப்பிரமணி மற்றும் பஸ் கிளீனரான சேலத்தை சேர்ந்த தீபன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சாலையில் நின்ற திருநாவுக்கரசு மனைவி விஜயா (60) மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பஸ்சுக்குள் இருந்த மற்ற பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரசின் மனைவி விஜயா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.
அதேசமயம் விஜயாவின் உறவினரான ஆத்தூர் துலுக்கனூரை சேர்ந்த மாதேஸ்வரி (60), இவரது மகன் ஜெயபிரகாஷ் (40) ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 டிரைவர்கள் கைது
இதனிடையே விபத்துக்கு காரணமான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் கார்த்திக் மற்றும் ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் பரமேஸ்வரன் ஆகிய 2 பேரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.
வழியனுப்ப வந்த நண்பர் பலியான சோகம்
விபத்தில் பலியான சுப்பிரமணி, லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவர், ரவிக்குமாரின் நண்பர் ஆவார். சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு பரிசோதனை நிலையத்தை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது, வழியில் பஸ்சுக்காக ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிற்பதை பார்த்தார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி, அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து பஸ் வந்தவுடன் அவர்களுடன் சுப்பிரமணி, சீர்வரிசை பொருட்களை எடுத்து பஸ்சில் ஏற்ற உதவி செய்தார். அந்த சமயத்தில் கோர விபத்தில் சிக்கி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.