நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 பேரில் 6 பேர் மீட்பு
நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 பேரில் 6 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி,
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இந்த கூர்நோக்கு இல்லத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 சிறுவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவில் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்ட 12 சிறுவர்கள் திடீரென்று வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து தப்பி ஓடிய சிறுவர்களை பிடிப்பதற்காக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய சிறுவர்களில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்தும் நெல்லை மாவட்டம் தாளையூத்தத்தில் இருந்து ஒரு மாணவரும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.