மணல் கடத்திய 6 பேர் கைது
விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழ கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற 6 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த மேல கோவிந்தபுத்தூர் பகுதிகளை சேர்ந்த அசோக் ராஜ் (வயது 46), முருகேசன் (41), வாசு (29), அறிவழகன் (27), பாக்யராஜ் (38), குமார் (44) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.