கொலைவழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலைவழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் (வயது 39) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன் (44), திருப்பதி பாண்டியன் மகன் முத்துசெல்வம் (24), பழையகாயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா (26), முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபுராஜா (20) ஆகிய 4 பேரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று, புதுக்கோட்டை அருகே உள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கற்பகவள்ளி (27) என்பவரை கொலை செய்த வழக்கில், அவரது கணவர் வேல்முருகன் (35), ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியை சேர்ந்த பண்டாரம் மகன் பிரேம்குமார் (21) ஆகிய 2 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கேசவன், முத்துசெல்வம், சிவபெருமாள் என்ற சிவா, முத்துராஜா என்ற பாபுராஜா, வேல்முருகன், பிரேம்குமார் ஆகிய 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தபபட்ட 10 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 167 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.